தங்கம் விலை சரிவு முதல் அரசுக்கு இபிஎஸ் கண்டனம் வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


தங்கம் விலை ரூ.70,000-க்கு கீழாக சரிவு: சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ 360 குறைந்து, ஒரு பவுன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் விலை ரூ.70,000-க்கு கீழாக மீண்டும் சரிந்துள்ளது நகை வாங்குவோருக்கு நிம்மதி தந்ததுள்ளது.

நீட் அச்சத்தால் மாணவர் இறந்ததை அடுத்து இபிஎஸ் கேள்வி: நீட் தேர்வு அச்சம் காரணமாக சேலம் அருகே மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், "ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?. ஸ்டாலின் அவர்களே - வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

என்னை ‘பெரிய பாய்’ என அழைப்பது பிடிக்கவில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்: சமூக வலைதளத்தில் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை குறிப்பிடும் போது ‘பெரிய பாய்’ என்றுதான் செல்லமாக கூறுவார்கள். இதைத்தான் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்: அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான நீதிமன்ற ஆணையை செயல்படுத்தாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர், இதில் உடனடியாகத் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கான மே மாத சம்பளத்தை வழங்கவும், பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியத்தை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி:இட ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அந்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்கு உட்படுத்துமாறு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

x