மதுரை: மணல் குவாரி உரிமம் தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சாந்தி, பாலாஜி, விஷ்ணுவர்தன், உமா மகேஸ்வரி, பவானி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா னிவாசநல்லூர் காவிரி ஆற்றில் 2001 முதல் 2004 வரை மணல் குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தோம்.
அடுத்த சில மாதங்களில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியது. மணல் குவாரிகளை அரசு ஏற்றதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கில் அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்த போதிலும், நாங்கள் சில மாதங்கள் குவாரி நடத்த அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக திருச்சி மாவட்ட நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. அதன் பின்னரும் உயர் நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத திருச்சி மாவட்ட ஆட்சியர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மணல் குவாரி நடத்தும் பொறுப்பை அரசு ஏற்ற பின்பு மனுதாரர்களுக்கு 6 மாதம் குவாரி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு காரணங்களைக் கூறி குவாரி நடத்த மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. மனுதாரர்கள் பல மனுக்கள் அனுப்பியும், நீதிமன்றத்தில் உத்தரவுகள் பெற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
உயர் நீதிமன்ற உத்தரவு 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் பல மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பில் இருந்து மாறியிருப்பார்கள். இதனால், தற்போதைய ஆட்சியரை மட்டும் குறை சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே மீறியதற்காக, மனுதாரர்கள் 5 பேருக்கும் தமிழக தொழில் துறை முதன்மைச் செயலர் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இதுதவிர, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இந்தத் தொகையை 8 வாரங்களில் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.