காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் நீர்வரத்து 6,233 கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.82 அடியை எட்டியுள்ள நிலையில், நீர் நிறைந்து காணப்படும் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு.

சேலம்: ​கா​விரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்து வரும் கனமழை​யால் மேட்​டூர் அணைக்கு வந்து கொண்​டிருக்​கும் நீரின் அளவு விநாடிக்கு 6,233 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. மேலும், அணை​யின் நீர்​மட்​டம் 108.82 அடி​யாக உயர்ந்​துள்​ளது. கோடை​காலத்​தின் உச்ச கால​மான அக்னி நட்​சத்​திர வெயில்​காலம் நீடிக்​கும் நிலை​யில், காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் கடந்த சில தினங்​களாக மழை பெய்துவரு​கிறது.

கடந்த 14-ம் தேதி மேட்​டூர் அணைக்கு விநாடிக்கு 390 கனஅடி நீர் வந்து கொண்​டிருந்​தது. அடுத்​தடுத்த நாட்​களில் அணைக்கு நீர்​வரத்து படிப்​படி​யாக அதி​கரிக்​கத் தொடங்​கியது. இந்​நிலை​யில், மேட்​டூர் சுற்று வட்​டாரத்​தில் கடந்த சில தினங்​களாக பரவலாக கனமழை பெய்​தது. குறிப்​பாக 17-ம் தேதி 55.4 மி.மீ. மழை பெய்த நிலை​யில் நேற்று முன்​தினம் 100.6 மி.மீ. மழை கொட்​டியது.

இதனால், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் 4,764 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 6,233 கன அடி​யாக உயர்ந்​தது. இதன் காரண​மாக மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் 108.52 அடி​யில் இருந்து நேற்று 108.82 அடி​யாக உயர்ந்​துள்​ளது. அணை​யின் நீர்​இருப்பு 76.32 டிஎம்​சியி​லிருந்து நேற்று 76.74 டி.எம்​.சி-​யாக உயர்ந்​தது. அணை​யில் இருந்து காவிரி​யில் விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

அணையி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் நீரின் அளவைக் காட்​டிலும், அணைக்கு வரும் நீர்​வரத்து அதி​க​மாக இருப்​ப​தால் அணை நீர்​மட்​டம் உயர்ந்து வரு​வ​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். காவிரி நீர்ப் பிடிப்பு பகு​தி​களில் அடுத்​தடுத்த நாட்​களாக மழை தொடரு​வ​தால், நீர்​வரத்து மேலும் அதி​கரிக்​கும்​ என்​று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

x