கோத்தகிரி: கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் திமுக அரசு தடுப்பதாக சசிகலா கூறினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்த சசிகலாவைக் எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் கட்டுவதற்காக 2024 ஜனவரி மாதம் பூமி பூஜை செய்தோம். மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி கோரினோம். ஆனால், சிலை அமைக்கவும், மணி மண்டபம் கட்டுவதற்கு அரசு தடை விதித்து வருகிறது.
தனியாருக்கு சொந்தமான இடங்களில் மணிமண்டபம் அமைத்து, வழிபாடு நடத்தலாம். ஆனால், எங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துவிட்டது. எனினும், தடைகளை மீறி நிச்சயமாக மணி மண்டபம் கட்டுவோம்.
திமுக அரசு தாங்க முடியாத அளவுக்கு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்திவிட்டது. எனவே, திமுக ஆட்சிக்கு முடிவுகட்டி, மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். இதை நான் நிறைவேற்றுவேன். இவ்வாறு சசிகலா கூறினார்.