போலீஸ் நடவடிக்கை, அதிக தண்டனையால் தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளன: டிஜிபி சங்கர் ஜிவால்


சென்னை: போலீஸாரின் தொடர் நடவடிக்கையாலும், அதிக அளவில் தண்டனை பெற்று தருவதாலும் தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்ற செயல்களை முற்றிலும் தடுக்க தமிழக காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், கடந்த 2024-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 1,563 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 12 ஆண்டில் இது மிகவும் குறைவாகும். இதேபோல, காவல் துறையின் தொடர் நடவடிக்கையால் இந்த ஆண்டும் கொலைகள் குறைந்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் 483 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.

மேலும், ரவுடிகளின் செயல்பாடுகளை குறைக்கும் வகையில், அவர்கள் மீதான குற்ற வழக்குகளை துரிதப்படுத்தி அதிக அளவு தண்டனை பெற்று தரப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டில் 242 ரவுடிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டது. குறிப்பாக, 150 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இது அதிகம் ஆகும்.

கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் பழிக்கு பழியாக 22 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 18 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. போலீஸார் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இதற்கு காரணம். போலீஸாரின் தொடர் கண்காணிப்பால் 326 கொலைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 4 மாதங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1,325 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பழிவாங்குதல் மற்றும் கொலைகளை தடுக்கும் வகையில், சிறையில் உள்ள ரவுடிகள் உட்பட சந்தேக நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இதனால், தமிழகத்தில் குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x