மின்கட்டண உயர்வை எவ்வகையிலும் ஏற்க இயலாது: முத்தரசன்: தமிழகத்தில் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 17 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (மே.19) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் மிக கனமழையும், நாளை (மே.20) கோவையில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
வங்கிகளுடன் முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
சேலம் - அரக்கோணம் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்: கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அரக்கோணம் - சேலம்- அரக்கோணம் ரயில் சேவை, 12 நாட்களுக்குப் பின்னர் நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்குகிறது. அதன்படி, அரக்கோணம்- சேலம் (எண். 16087) பயணிகள் ரயிலானது, அரக்கோணம் ரயில் நிலையத்தில் நாளை அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை காலை 10.50 மணிக்கு வந்தடையும்.
ஆளுநருடன் எந்த மோதலும் இல்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருடன் எந்த பிரச்சினையும் இல்லை. மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமானது. அரசின் வேகமான செயல்பாட்டுக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம் என புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.