கம்பம் பகுதியில் முதல் போகத்துக்காக தயாராகும் விளைநிலங்கள்: பசுந்தாள் உரப் பயிர்கள் விளைவிப்பு


மண்வளத்தை அதிகரிப்பதற்காக நெல்வயல்களில் விளைவிக்கப்பட்டுள்ள பசுந்தாள் உரப் பயிர்கள். இடம்: க.புதுப்பட்டி. படம்:என்.கணேஷ்ராஜ்.

உத்தமபாளையம்: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக விவசாயத்தில் ரசாயன பயன்பாட்டை குறைக்கும் வகையில் மண்வளத்தை அதிகரிப்பதற்காக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பசுந்தாள் உரப்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டன.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லை பெரியாறு அணை நீர் மூலம் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறு கின்றன. கடந்த மாத தொடக்கத்தில் இரண்டாம் போக சாகுபடி முடிந்த நிலையில் விளை நிலங்களில் சிதறிக் கிடந்த வைக் கோல்கள் முற்றிலும் அகற்றப்பட்டன.

பின்பு முதல் போகத்துக்கு நிலத்தை தயார் செய்யும் பணி தொடங்கியது. இதற்காக வயல்களில் நீர் பாய்ச்சி பசுந்தாள் உரப் பயிர்கள் பயிரிடப் பட்டன. இந்த பயிர்கள் கோடை வெப்பத்தில் இருந்து நிலத்தை பாதுகாப்பதுடன், மண்வளத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “பசுந்தாள் உரப் பயிர்களான கொழிஞ்சி, சணப்பை, தக்கைப் பூண்டு, மணிலா, நரிப் பயறு, சித்த கத்தி உள்ளிட்ட பல்வேறு உரப் பயிர்கள் தற்போது பயிரிடப்பட்டன. இப்பயிர்கள் கோடை மழையின் ஈரப்பதத்தை நிலை நிறுத்தவும், கார, அமிலத் தன்மையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

முதல் போகத்துக்கு வயலை தயார் செய்யும் போது, விளைந்துள்ள இந்த உரப் பயிர்களையும் மண்ணுடன் சேர்த்து உழவு செய்வோம். இதில் சாம்பல் சத்து, மணிச் சத்து மற்றும் தழைச் சத்து அதிகளவில் இருப்பதால் மண் வளம் பெருகும். இதன் மூலம் நெல் சாகுபடியில் பயன்படுத்தக் கூடிய ரசாயன உரமான யூரியாவின் பயன்பாடு வெகுவாய் குறையும். நெல் விளைச்சலும் அமோகமாக இருக்கும்” என்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் போகத்துக்காக அணையில் இருந்து நீர் திறக்கப்படும். இதற்காக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளின் பல இடங்களில் நிலத்தை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

x