கமுதி: கமுதி அருகே சுதந்திரம் அடைந்து இதுவரை பேருந்து வசதியில்லாத கிராமத்துக்கு முதன் முறையாக புதிய பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டதை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள கிராமம் வண்ணாங்குளம். இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் காட்டுக் கருவேல மரம் மூலம் கரிமூட்டத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்துக்கு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை பேருந்து போக்குவரத்து வசதி கிடையாது. இவர்கள் 3 கி.மீ தொலைவிலுள்ள வேப்பங்குளம் கிராமத்துக்கோ அல்லது 4 கி.மீ தொலைவிலுள்ள பம்மனேந்தல் கிராமத்துக்கோ நடந்து சென்று பேருந்து வசதியை பயன்படுத்தி வந்தனர்.
இக்கிராமங்களில் இருந்து கமுதி சென்று, அங்கிருந்து சாயல்குடி, அருப்புக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வந்தனர். அதனால் இக்கிராம மக்கள் நீண்ட காலமாக பேருந்து வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்தத் தொகுதியின் எம்எல்ஏவும், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடமும் பேருந்து வசதி கேட்டு முறையிட்டனர்.
அதனையடுத்து இன்று வண்ணாங்குளத்தில் இருந்து கமுதிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. அதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து பேருந்துக்கு மாலை அணிவித்தும், குலவை இட்டும், கைகளை தட்டியும் பேருந்தை வரவேற்றனர். மேலும், பேருந்து ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் கிராம மக்கள் சால்வை அணிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கமுதி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராஜ்குமார், கமுதி திமுக ஒன்றியச் செயலாளர் சண்முக நாதன், தொமுச காரைக்குடி மண்டல செயலாளர் பச்சமால் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.