ரூ.70,000 தொட்ட தங்கம் விலை முதல் மேட்டூர் நீர்மட்டம் உயர்வு வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


வேளாண் வளர்ச்சி -0.09% ஆக வீழ்ந்ததுதான் சாதனையா? - அன்புமணி: 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார்.

மீண்டும் ரூ.70 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை!: சென்னையில் இன்று (மே.19) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனையாகிறது.

சிவகிரி வயதான தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை: தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை என தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு இன்று (மே/19) நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களாக தொடரும் மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

x