தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வாழை, வெற்றிலை, கோடை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு ள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும், கோடை உழவு மற்றும் குறுவை சாகுபடி பணிகளை தொடங்க இந்த மழை பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், நேற்று முன்தினம் மழைக்கு முன்பாக காற்று பலமாக வீசியதால், திருவையாறு, அம்மாப் பேட்டை, பாபநாசம் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை, வெற்றிலை, கோடை நெல் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கும்பகோணம் கோட்டத்தில் பாபநாசம் வட்டம் பட்டுக்குடி, கணபதியக்ரஹாரம், வீரமாங்குடி, சோமேஸ் வரம், ஈச்சங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 750 ஏக்கருக்கு மேல் கடந்தாண்டு ஜூலையில் சாகுபடி செய்யப்பட்ட வாழைகளில் தற்போது வாழைத்தார்கள் அறுவடை க்கு தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் பலத்த காற்றுடன் பெய்த மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வாழைத்தாருடன் முறிந்து விழுந்தன.
அதேபோல, பாபநாசம் வட்டம், இளங்கார்குடி, வன்னியடி, பண்டாரவாடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்திருந்தனர். 20 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை பறிக்கும் நிலையில், காற்றுடன் பலத்த மழையால் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வெற்றிலைக் கொடிகள் அடியோடு முறிந்து சாய்ந்தன. இதனால், வாழை மற்றும் வெற்றிலை சாகுபடி விவசாயிக ளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 71.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் பிற இடங்களில் பதிவான மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): வெட்டிக்காடு 65.2, திருவிடைமருதூர் 44.2, பட்டுக்கோட்டை 35, அய்யம்பேட்டை 34, கும்பகோணம் 33, நெய்வாசல் தென்பாதி 32.6, அதிராம்பட்டினம் 32.3, திருக்காட்டுப்பள்ளி 32.1, தஞ்சாவூர் 31, திருவையாறு 30, பேராவூரணி 29, மதுக்கூர் 28.2, ஈச்சன்விடுதி 26, குருங்குளம் 25.6, வல்லம் 24, பாபநாசம் 20, பூதலூர் 19.2, அணைக்கரை 18.6, மஞ்சளாறு 16.8, கல்லணை 14.2.
நாகை மாவட்டத்தில்...: நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் சாரல் மற்றும் மிதமான மழை மதியம் 12 மணி வரை பெய்தது. பின்னர், சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் சூறைக் காற்றுடன் கனமழை தொடர்ந்தது. நாகை, நாகூர் மற்றும் கடற்கரையோர மீனவ கிராமங்களில் காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
திருப்பூண்டி, திருமருகல், திருக்குவளை, திட்டச்சேரி, கீழ்வேளூர், கீழையூர், பாலையூர், பெருங்கடம் பனூர், நிர்த்தனமங்கலம், மீனம்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், பல நாட்களாக நிலவிய வெப்பம் தணிந்து, குளிர் பிரதேசம் போல நாகை மாறியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பட்டுக்குடியில் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் அடியோடு முறிந்து சாய்ந்த வாழை மரங்கள்.