ஈரோடு புறநகர் பகுதிகளில், 3-வது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடம்பூரில் வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சராசரியாக 100 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன்பு உட்சபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெப்பம் பதிவானது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஈரோடு புறநகர் பகுதிகளான அந்தியூர், கோபி, கடம்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
கனமழையால் கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், தாளவாடி உள்ளிட்ட வனப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், ஓடைகள் நிரம்பி வருகின்றன. சில இடங்களில் சாலையோரம் உள்ள மரங்கள் முறிந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடம்பூரை அடுத்த பெரியகுன்றியில் நேற்று முன் தினம் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மரம் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தது. இதனால், இப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
தாளவாடி பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாளவாடிய அடுத்த திகினாரை ஊராட்சி மல்குத்திபுரம் தொட்டி திம்மண்குட்டை பகுதியில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்பகுதியில் உள்ள தரைப்பாலம் முழ்கியதால், போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் 51 மிமீ மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): வரட்டுப்பள்ளம் – 51, மொடக்குறிச்சி - 25, அம்மாபேட்டை - 20, பவானி -19.20, கொடிவேரி அணை - 19, சத்தியமங்கலம் -18.30, கோபி - 16.20, சென்னிமலை, நம்பியூர் - 16, ஈரோடு - 14.60, கவுந்தப்பாடி - 11.20, குண்டேரிப்பள்ளம் அணை - 10.20, எலந்தகுட்டை மேடு - 9, பெருந்துறை -8, பவானிசாகர் அணை -7.80, கொடுமுடி -6, தாளவாடி -4.20 மிமீ என மழை அளவு பதிவானது.
சங்ககிரியில் 73 மி.மீ மழை: சேலம் மாவட்டத்திலும் சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சங்ககிரியில் 73 மிமீ, சேலத்தில் 72.2 மிமீ, எடப்பாடியில் 71.2 மிமீ மழை கொட்டியது. மாவட்டத்தி ன் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டு, பின்னர் சீரானது.
மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழையளவு (மிமீ-ல்): ஏத்தாப்பூர் 65, ஆனைமடுவு 64, மேட்டூர் 55.4, வாழப்பாடி 45.4, ஓமலூர், தம்மம்பட்டி 45, தலைவாசல் 43, கரியகோவில் 35, வீரகனூர் 31, டேனிஷ் பேட்டை 27, கெங்கவல்லி 20, ஆத்தூர் 26.2 மீமீ என மழை அளவு பதிவானது.