திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியது முதல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. பிரையன்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கி விட்டன. இந்நிலையில் கொடைக்கானலில் கோடைவிழா, மலர்க் கண்காட்சி நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை, சுற்றுலாத் துறைகள் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் செ. சரவணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் நடராஜன், சுற்றுலாத் துறை அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் ஆட்சியர் செ.சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும் வகையில் பரத நாட்டியம், சிலம்பம், விளையாட்டுப் போட்டிகள், படகுப் போட்டிகள், நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மலர்க் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.75, சிறியவர்களுக்கு ரூ.35 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியில் வேளாண்-உழவர் நலத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.