2026 தேர்தலில் புதிய வரலாற்றை படைப்போம்: சீமான் நம்பிக்கை


வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய அரசியல் வரலாற்றை படைப்போம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இலங்கையில் மே 18ல் நடைபெற்ற இனப்படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில், கோவை கொடிசியா திடலில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: ஈழத்தில் இறுதி போர் நடக்கும் போது மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தன. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போரை நிறுத்த குரல் கொடுக்கவில்லை. இந்த நான்கு கட்சிகளும் தமிழ் பேரினத்தின் பகைவர்கள். தமிழகத்தில் மாற்று என வந்தவர்கள் திமுக, அதிமுக-வோடு கூட்டணி வைத்து காணாமல் போய் விட்டார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ். அதை செயல்படுத்தியது பாஜக.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் நின்று 1.1 சதவீத வாக்குகள் பெற்றோம். ஒரு இடைத் தேர்தலையும் புறக்கணிக்காமல் போட்டியிட்டோம். 2021ல் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு 117 பெண்கள், 117 ஆண்கள் என சம வாய்ப்பு கொடுத்தோம். 30 லட்சம் வாக்குகளுடன் 7 சதவீத வாக்கு பெற்றோம்.

2024 தேர்தலில் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகள் பெற்று மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளோம். எந்த கட்சியோடும் சேராமல் போட்டியிட்டு வருகிறோம். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 5-வது முறையாக தனித்து போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற்றை படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மனோ ரஞ்சன் பியாபரி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஜக் மோகன் சிங், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x