சென்னை: 2023-24-ம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கியது குறித்து உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்வாரியம் 2023-23-ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியிருப்பதும், அதற்காக ரூ.13,179 கோடி கூடுதலாக செலவழித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலையில், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டதன் பின்னணியில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டிருந்தால், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தைக்கூட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இருக்காது.
தமிழகத்தின் மின் உற்பத்தியே தேவைக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், அவ்வாறு செய்தால் தமிழகம் நன்றாக இருக்கும். தாங்கள் நன்றாக இருக்க முடியாது என்பதால்தான் தமிழக ஆட்சியாளர்கள் மின்திட்டத்தை செயல்படுத்த விரும்புவதில்லை.
தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதுதான் அவர்களுக்கு லாபம் என்பதால், அந்த வழக்கத்தையே தொடர்கின்றனர். இதுதான் மின்சார வாரியத்தின் இழப்புக்குக் காரணமாகும். தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.41,000 கோடி அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதற்கு காரணம், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதுதான்.
இதில் ஒளிந்து கிடக்கும் அனைத்து மர்மங்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக 2023-24-ம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டது பற்றி உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.