ஊட்டி அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் இரவு நேரத்தில் இரு சிறுத்தைகள் புகுந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. குன்னூர், கோத்தகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக அதிக புகார்கள் வந்துள்ளன. தற்போது கொல்லி மலை பகுதியில் குடியிருப்புக்குள் இரு சிறுத்தைகள் நுழைந்த காட்சி, அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
இறைச்சிக் கழிகள் மற்றும் வளர்ப்பு நாய்களால் கவரப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருகின்றன. நாய் வளர்ப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் கூண்டுகளை அமைத்து நாய்களை பராமரிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் வனத்துறையை அணுகலாம்.
இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இறைச்சிக் கழிவுகளை தெருவோர சாலைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.