கோவையில் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!


கோவையில் கனமழை காரணமாக லங்கா கார்னர் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கோவையில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் மாவட்டத்தில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. உக்கடம், கவுண்டம்பாளையம், காந்திபுரம், கணபதி, பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அரைமணி நேரம் கொட்டிய மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. கோவை ரயில் நிலையம், லங்கா கார்னர், உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் நீதிமன்றம் அருகே மழை நீர் குளம் போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

கோவை மாநகர் பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விடுமுறை நாளான நேற்று திடீர் மழை காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். கோவை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

கோவை கூட்செட் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது. தேங்கிய மழைநீரை பணியாளர்கள் மூலமாக அகற்றும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

x