புதுச்சேரி: போலி மது ஆலை, சந்தன மரக்கட்டை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி அமைச்சர் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிப்பது அவசியம் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகியுள்ளதுடன் கட்சியை முதலில் பலப் படுத்தி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் புதுவை மாநிலத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் சுராஷ் ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைக் குழுத் தலைவர் வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: புதுவை மாநில என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அரசின் அனைத்துத் துறையிலும் முறைகேடு நடைபெற்றுள்ளன. அரசுத் துறை முறைகேடுகள் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
ஆனால், நடவடிக்கை இல்லை. புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தனக் கட்டை கடத்தல் மற்றும் போலி மது ஆலை செயல்பட்டது குறித்து தமிழகப் போலீஸார் விசாரித்து வழக்குப் பதிந்துள்ளனர். ஆனால், புதுவை மாநில அரசு அது குறித்து விசாரணை கூட நடத்தாமலிருப்பது சரியல்ல.
ஆகவே, அமைச்சர் மீதான புகாருக்கு புதுவை அரசு மக்களிடம் உரிய பதிலை அளிக்க வேண்டும். அமைச்சர் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். புகார் தொடர்பாக அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி ஊழலில் ஈடுபடமாட்டோம், ஊழலை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்.
ஆனால், புதுவை அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் உள்ளிட்டோர் மவுனம் காப்பது சரியல்ல. புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் தயாராகிவிட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சியை முதலில் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அதன்பின் தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தற்போது இண்டியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருகிறோம் என்றார்.