நத்தம்: நத்தம் அருகே பூசாரிபட்டியில் கிராம மக்கள் பங்கேற்ற மீன் பிடி திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டியில் 50 ஏக்கர் பரப்பளவில் தாமரை கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் கண்மாயில் சமத்துவ மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கண்மாயில் நீர் இருப்பு குறைந்த நிலையில் மீன் பிடி திருவிழா நடத்த கிராமமக்கள் ஏற்பாடு செய்தனர்.
முன்னதாக மீன் பிடி திருவிழாவில் பங்கேற்க சுற்றுப்புற கிராம மக்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுகுடி, பூசாரிபட்டி, நல்லகண்டம், இந்திராநகர், புதுப்பட்டி, லட்சுமிபுரம், தேத்தாம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, குப்பப்பட்டி, ஒடுகம்பட்டி, எட்டயம்பட்டி, அணை மலைப்பட்டி உள்ளிட்ட 18 பட்டி கிராம மக்கள் கண்மாய் கரையில் திரண்டனர்.
ஒரே நேரத்தில் ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, கூடை மற்றும் ஊத்தா மீன் பிடி கூடைகளை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் ஜிலேபி, குரவை, ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. கண்மாயில் இறங்கி மீன் பிடித்த மக்கள் ஒவ்வொருக்கும் 2 கிலோ முதல் 5 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தது. கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று சமைத்து உண்டனர்.