டாஸ்மாக் ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்தி வரும் சோதனைகளில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குதல் போன்றவை தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால் அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. விசாரணை முடிவில் டாஸ்மாக் ஊழல்கள் குறித்து மேலும் ஏராளமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு மாறாக டாஸ்மாக்கை ஊழல் நிறுவனமாக மாற்றியிருப்பதுடன், அதில் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணைக்கு தமிழக அரசு தொடக்கம் முதலே முட்டுக்கட்டை போட்டுவருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு வழக்கு நடத்தியது. ஆனால், தமிழக அரசின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டப்பூர்வமானதுதான் என்று சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பு அளித்தது.
எனவே, அமலாக்கத் துறை சோதனைக்கு காரணமான மூல வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலைகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது. டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்பிவிடுவார்கள். எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்