கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்


சாகச செயல் புரிந்ததற்காக வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீர பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்க பரிசுடன் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கத்துடன் கூடிய கல்பனா சாவ்லா விருதை தமிழக அரசு வழங்குகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழகத்தில் பிறந்தவராக, 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். தைரியமிக்க, துணிச்சலான செயல்களை செய்திருக்க வேண்டும். அவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் தமிழ், ஆங்கிலத்தில் ஜூன் 16-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பதாரரின் கருத்துருவை புத்தக வடிவத்தில் தயாரித்து, சமர்ப்பிக்க வேண்டும். தங்களது வாழ்க்கை வரலாறு, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள். தாங்கள் மேற்கொண்ட தைரியமிக்க, துணிச்சலான செயலின் அனுபவம் பற்றி ஒரு பக்க எழுத்து விளக்கம் உள்ளிட்டவற்றை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

x