பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்: “கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.
1,500 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா: அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த மாத கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு கோடைக்கால மின் தேவை குறைவு: மின்துறை அமைச்சர்: “கோடைக்கால மின் தேவை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. கோடை மழை பெய்து வருவது, காற்றாலை சீசன் தொடங்கி இருப்பது ஆகியவற்றால் இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்” என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் நாளை (மே 18) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
500-க்கு 499 மதிப்பெண் பெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகள்: 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகளுக்கு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட உயர் அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து, நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி வழிக்காட்டுதலின்படி பொது மேலாளர் என்.முத்துக்குமாரசாமி, மாணவி சோபியாவை இனிப்பு, பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.