ஊட்டி: ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் பெய்த கனமழைக்கு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாயின.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணி நேரம் மழை பெய்து இருந்தது. இதேபோல் நேற்றும் மதியம் 12 மணி முதல் இரண்டு மணி வரை 2 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது.
ஊட்டியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மத்திய பேருந்து நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா பிங்கர் போஸ்ட் உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. அதே போல் ரயில் நிலையம் பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சென்றனர்.
ரயில் நிலைய காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்ததால் பணியில் இருந்த காவலர்கள் வெளியே வந்தனர். ரெயில்வே பாலத்தில் பேருந்துகள் மற்றும் ஒரு சில கார்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. ரயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் குளம் போல் காட்சியளித்தது. அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர், சாலையே தெரியாத அளவிற்கு காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.
மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழைநீர் வெள்ளம் பல பகுதிகளில் வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது முதல் மழையும் தொடங்கி விட்டதால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடி மலர்களை கண்டு ரசித்தனர்.