மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அவரை சந்திக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தவெக தலைவரின் விருப்பம்.
தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அனைவரும் ஓரணியில் வந்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி ஓரணியில் திரள முடிவெடுக்க வேண்டும்.
இதைத் தவிர்த்து, கட்சித் தலைவர்கள் அவரவர் எடுக்கும் முடிவு குறித்து நான் கருத்துத் தெரிவிக்க முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஏற்கெனவே கூட்டணியில் இருப்பதால், அவரை அமித்ஷா சந்திக்காமல் இருந்திருக்கலாம்.
இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளனர். அடுத்த தேர்தலிலும், அதற்கு அடுத்த தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். யார் முதல்வர் என்பதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள். தமிழகத்தில் பாஜக ஏற்கெனவே வளர்ந்துள்ளது. பாஜவை இனி ஆளும்கட்சியாகக் கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு மதுப் பழக்கம் முக்கியக் காரணமாக இருக்கிறது. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.