சென்னை: செஞ்சியில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 167 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று கூறியதாவது: ஆண்டுதோறும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை பொறுத்து, ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை அதிகரித்து வருகிறோம். தமிழ், ஆங்கில பாடங்களில் அதிக தேர்ச்சி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி திறக்கும்போது வெயிலின் தாக்கத்தை கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
செஞ்சியில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 167 மாணவர்கள் பிளஸ் 2 வேதியியலில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. நமது பிள்ளைகள் 100 மதிப்பெண் எடுத்ததையும், அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் பாராட்ட வேண்டும். அவர்கள் மற்ற பாடத்திலும் சிறப்பான மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டும் செஞ்சிபள்ளியில் மாணவர்கள் நன்றாக மதிப்பெண் பெற்றுள்ளனர். அதாவது 91-99 மதிப்பெண் வரை 104 பேர் எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்கட்ட விசாரணையை நடத்திவிட்டோம். வினாத்தாள் கசிந்ததா, தேர்வறை கண்காணிப்பில் வேதியியல் ஆசிரியர்கள் பணியில் இருந்தார்களா என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடந்ததாக தெரியவில்லை. தொடர் விசாரணை முடிவில் மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்ததற்கு ஆசிரியர்களின் கற்பித்தல் முறை காரணமாக இருந்தால், அந்த மாடலை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம்.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான நிதி ரூ.617 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மாநில அரசு அதை ஏற்றுக்கொண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இந்த நிதியை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் வரவில்லை.
இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை செயலாளரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரும் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்ததும், இந்த ஆண்டுக்கான ஆர்டிஇ சேர்க்கை திட்டம் குறித்த அறிவிப்பை தெரிவிப்போம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.