திருவண்ணாமலை: மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று கூண்டுக்கிளியாக விரும்பவில்லை. தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறியிருக்கிறார். ஊட்டியில் வெயில் குறைவாக இருப்பதால், ஏதாவது பேசத்தோன்றும். அடுத்து சென்னை வெயிலுக்கு வந்தால், தெளிவடைந்து வழக்கம்போல பேசுவார். மோடியின் இதயத்தில் ஓபிஎஸ்-க்கு தனி இடம் இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் அனைவரும் பாஜகவோடுதான் இருக்கிறார்கள். யாரும் பிரிந்து போகவில்லை. பாஜக கூட்டணி வலுவாகத் தான் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ளவர்கள்தான் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்குகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. 2026-ல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாகத் தமிழக மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார்கள். புத்தகங்கள் படிப்பதற்கும், குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவதற்கும் எனக்கு தற்போது நேரம் கிடைத்துள்ளது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஓய்வுபெறும் சில நாட்களுக்கு முன்பு கைது நடவடிக்கை வரை சென்றனர்.
மத்திய அமைச்சரவையில் எனக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று கேட்கிறீர்கள். என்னை ஏன் கூண்டுக்குள் அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நான் சாமானிய மனிதனாக இருப்பதையே விரும்புகிறேன். எனக்கு அதிகாரம் எல்லாம் தேவையில்லை. நான் சுதந்திரமாக இருக்கிறேன்.
நான் கூறிய கூண்டுக்கிளி விவகாரத்தை விவாதமாக்க வேண்டாம். அதேபோல, கூண்டுக்கிளி என்று சொன்னதை மற்ற அமைச்சர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் வேண்டாம். நான் தந்தையாகவும், மகனாகவும் இருக்கவே விரும்புகிறேன். என்னை ஏன் கூண்டில் அடைத்து வைக்கப் பார்க்கிறீர்கள் என்றுதான் தெரிவித்தேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.