ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


‘எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நல பள்ளிகள் 90.52 சதவீதமும், பழங்குடியினர் நலப்பள்ளிகள் 93.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இது கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அரசு பள்ளிகள் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் உள்ளிட்ட அரசுத் துறைகளின் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு: அரசு பள்ளிகள் - 91.35 சதவீதம்; ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் - 90.52; மாநகராட்சி பள்ளிகள் - 88.74; வனத்துறை பள்ளிகள் - 94.89; கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - 93.14; நகராட்சி பள்ளிகள் - 90.59; சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள் - 87.69; சமூகநலத்துறை பள்ளிகள் - 78.43; பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் - 93.56 சதவீதம்.

முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: அரசுத் துறைகளின் பள்ளிகள் வாரியான தேர்ச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் இந்த ஆண்டு 90.52 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு இத்துறையின் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.68 சதவீதமாக இருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு 92.45 சதவீதமாக இருந்த பழங்குடியினர் நலப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 93.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்ந்திருப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது! உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது #DravidianModel அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்" என குறிப்பிட்டுள்ளார்.

x