ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பிஏபி தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 74.70 அடியாக உயர்ந்தது.
இந்தாண்டு பழைய ஆயக்கட்டு முதல் போகம் பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீர்வளத் துறையினரும் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தனர். இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இது குறித்து நீர்வளத்துறையினர் கூறும்போது, "பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் அக்டோபர் 15ம் தேதி வரை 152 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து 1,205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பாசனத் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால், ஆனைமலை டெல்டா பகுதியிலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என்றனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், பரம்பிக்குளம் கோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், ஆழியாறு அணை உதவிப் பொறியாளர் கார்த்திக் கோகுல் உட்பட பலர் பங்கேற்றனர். பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீருக்கு அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.