நீலகிரியில் சுற்றுப் பயணம் நிறைவு: சென்னைக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்


ஊட்டி: ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ஊட்டி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை புறப்பட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி ஊட்டி வந்தார். ஊட்டி அரசு தமிழக மாளிகையில் தங்கிய அவர், கடந்த 13-ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு சென்றார். அங்கு ரூ.5 கோடியே 6 லட்சம் செலவில் 44 அரசு குடியிருப்புகளு டன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வான் வழி தொகுப்பு கம்பிகளின் சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார். பின்னர், தெப்பக்காடு யானைகள் முகாமில் பணிபுரியும் மாவூத் மற்றும் காவடிகளுடன் கலந்துரையாடி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, 14ம் தேதி ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று, அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று, மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

நேற்று, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி அவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டார். இந்நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசிய முதல்வர், 11.30 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டார்.

முன்னதாக ஊட்டி தமிழக மாளிகை அருகே ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் சாலையின் இரு புறங்களிலும் நின்று முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக மாளிகை நுழைவு வாயில் பகுதியில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்று பொது மக்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து கை குலுக்கி சென்றார்.

அப்போது அங்கு காத்திருந்த தொண்டர்கள் சிலர் அவருக்கு யானை பொம்மையை பரிசளித்தனர். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். பின்னர், ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப் பாளையம் சென்றார்.

x