டாஸ்மாக் ‘ரெய்டு’: சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: “கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது. பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர் கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (மே 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்: செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். மேலும், இவ்வளவு சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியர்கள், நன்றாக படித்த மாணவ, மாணவிகளுக்கு யாரும் கிரெடிட் கொடுப்பதில்லை. எல்லோரும் சந்தேகப் பார்வையுடனே எங்களை பார்க்கின்றீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் தான் உள்ளனர்” - பாஜக: “இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அனைவரும் ஓரணியில் வந்தால் இதை நிறைவேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.