பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 93.80% பேர் தேர்ச்சி: தமிழகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதன்படி, 10-ம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது.
“தமிழகத்தில் திமுகதான் ஆட்சி அமைக்கும்!” - முதல்வர் ஸ்டாலின்: “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த விவகாரம் தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடன் பேசி, அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தலிலும் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி அமைக்கும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தங்கம் பவுனுக்கு ரூ.880 உயர்வு: இன்று (மே.16) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8720-க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
10-ம் வகுப்பு முடிவுகள்: சிவகங்கை மாவட்டம் முதலிடம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தின்படி, 98.31% பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் அடுத்த 4 இடங்களைப் பிடித்துள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களிலும் சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
‘சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது’ - திருமாவளவன்: நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்காகவும், நில உரிமைக்காகப் போராடும் உள்நாட்டு மக்களை, மாவோயிஸ்ட் என்ற பெயரில், ராணுவம் மூலம் அமித்ஷா அழித்து வருகிறார். ஓரே தேசம் ஓரே கலாச்சாரம் என்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்