வடகாடு தாக்குதல்: புதுகையில் மே 19-ல் விசிக ஆர்ப்பாட்டம்


திருச்சி: வடகாட்டில் பட்டியலின சமூகத் தின் குடியிருப்புப் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் மே 19ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் திருச்சியில் வரும் 31ம் தேதி நடைபெறும் பேரணி தொடர் பாக, கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதச்சார் பின்மையைக் காப்போம் என்ற மையக் கருத்தில் திருச்சியில் வரும் 31ம் தேதி நடைபெறும் பேரணியில் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும்.

வடகாட்டில் பட்டியலின சமூகத்தின் குடியிருப்புப் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி தராத நிலையில், உயர் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டையில் வரும் 19ம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாமக சார்பில் அண்மையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில், மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் சில கருத்துகளைப் பேசியுள்ளனர். சமூக நீதி குறித்தோ, மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்கள் குறித்தோ பேசவில்லை. மாறாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சீண்டும் வகையில் பேசியுள்ளனர்.

அடங்க மறு, அத்து மீறு என்பது குறிப்பிட்ட சாதிக்கான முழக்கம் அல்ல. அடக்குமுறைக்கு உள்ளாகும் வன்னியர் சமூகம் உள்ளிட்ட எந்த சமூகத்துக் கும் இது பொருந்தும். உலகத்தில் எந்த மூலையிலும் ஒடுக்குதலுக்கு அஞ்சி மக்கள் ஒடுங்கிவிடக் கூடாது என வலியுறுத்தும் அந்த முழக்கத்தை சாதிய முழக்கமாக பார்க்கிறார்கள். அது, அவர்களது அணுகுமுறை. இவ்வாறு அவர் கூறினார்.

x