கறவை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு தாராளமாக கடன் உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பால்வளத் துறை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகியன இணைந்து நடத்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், எம்.பி. சுதா, ஆட்சியர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்எல்ஏ-க்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர் செல்வம், எஸ்.ராஜ குமார், பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் அண்ணா துரை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) முகமது ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளரகளிடம் அமைச்சர் கூறியபோது, “மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கறவை மாடு வாங்குவதற்கு முடிந்தளவு விதிமுறைகளை தளர்த்தி, தாராளமாக கடனுதவிகள் வழங்க வங்கிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறிய பால் பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவியை வழங்கி ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்நிகழ்வில், ரூ.47.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் குளிர்விப்பான் மையத்துக்கு ஆட்சியர் ஆகாஷுடன் சென்று, அமைச்சர் மனோ தங்க ராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் கூறியபோது, “தமிழகத்தில் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், கால்நடை வளர்ப்பதற்கு உதவியாக மிகுதியான நபர்களுக்கு கறவை மாட்டுக் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றார். இந்நிகழ்வில், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.