வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்படாது: அமைச்சர் கே.என்.நேரு தகவல்


வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்படாது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என்.நேரு தெரிவித்தார்.

திருவாரூரில் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் டிஆர்பி. ராஜா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் வரவேற்றார். கட்சியின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்தார்.

பின்னர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இதில், திருவாரூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தோம். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டு வரி, சொத்து வரி உயர்வு ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் வரியை உயர்த்தக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே, வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்படாது. பழைய நிலையிலே வரிகள் தொடரும், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றார்.

x