[X] Close

மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் பெட்டிக் கடைகள்: தினந்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிப்பு


madurai-traffic-illegal-petty-shops

காளவாசல் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தள்ளுவண்டிக் கடைகள்.

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 22 Mar, 2018 16:52 pm
  • அ+ அ-

மதுரையில் பஸ் நிலையங்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அனுமதியில்லாமல் ‘பெட்டிக்கடைகள்’, சாலையோரக் கடைகள் பெருகி வருவதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூங்கா நகரான மதுரை இரவு நேரத்திலும் பரபரப்பாகச் செயல்படும். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ்நிலையத்தில் இரவிலும் பஸ் போக்குவரத்து, பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சமீப காலமாக மதுரை சாலைகளில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகளும், கணக்கில் அடங்காத சாலையோரக் கடைகளும் பெருகிவிட்டன.

மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், நெடுஞ்சாலைகளில் பெட்டிக்கடைகள் வைக்க மாநகராட்சியின் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்க வேண்டும். அதற்கு முன், சம்பந்தப்பட்டவர்கள் மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறையிடம் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை என என்ஓசி சான்று வாங்க வேண்டும்.

ஆனால், அப்படி என்ஓசி வாங்குபவர்கள், கடந்த காலம் முதலே ஒரு கடைக்கு அனுமதி பெற்று ஒன்றுக்கு மேற்பட்ட கடைகளை நடத்துகின்றனர். இந்தக் கடைகளை அந்தந்த பகுதி அரசியல்வாதிகளே அனுமதி பெற்று, தனி நபர்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர்.

அரசியல்வாதிகளின் பின்னணியில் இந்தக் கடைகள் செயல்படுவதால், மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத்துறையோ, காவல்துறையோ நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். மக்கள் நெருக்கம், வாகனப் போக்குவரத்து அதிகமான சாலைகளில் இந்தக் கடைகள் இருப்பதால், மாதம்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. 

அதில் அதிகாரிகளை அவர்கள் சரிகட்டி விடுவதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத்துறையோ இந்த பெட்டிக்கடைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. மதுரை விரைவில் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற உள்ளது. அதனால், தற்போதே அனுமதியில்லாத பெட்டிக் கடைகள், சாலையோர கடைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல்கள் அடிப்படையில் நெல்பேட்டை சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறியது: மாநகராட்சி அனுமதி இன்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர பெட்டிக் கடைகள் புற்றீசல் போலப் பெருகி விட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது பாரபட்சமாக இந்த பெட்டிக்கடைகளை மட்டும் அகற்றுவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மாநகராட்சியில் எவ்வளவு பெட்டிக்கடைகள் செயல்படுகின்றன, அவை எந்தெந்த இடங்களில் செயல்படுகின்றன என வருவாய் உதவி ஆணையரிடம் கேட்டிருந்தேன். 

ஆனால், அவர் மாநகராட்சியில் 558 சாலையோர பெட்டிக்கடைகள் மட்டும் இருப்பதாக தகவல் அளித்தார். ஆனால், அவை எங்கெங்கு செயல்படுகிறது என்ற விவரத்தை தர மறுக்கிறார். தந்தால் ‘பெட்டிக்கடைகள்’ பின்னால் இருக்கும் அரசியல் வெளியே தெரிந்துவிடும் என்பதால் மறைத்து விட்டார்.

மீனாட்சி பஜார், பாண்டி பஜார் கடைகள் 570-ம் கூட இந்த ‘பெட்டிக்கடைகள்’ பட்டியலில்தான் வருகிறது. அதனால், இக் கடைகளை கணக்கெடுத்தாலே அவர்கள் கொடுத்த பட்டியலை தாண்டி விடுகிறது. அப்படியென்றால் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ்நிலையம் போன்ற இடங்கள், 100 வார்டுகளில் சாலையோர பெட்டிக்கடைகளை கணக்கெடுத்தால் அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்படக் கூடும். 

இதுதவிர சட்டத்துக்கு புறம்பாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலையோரக் கடைகள் புற்றீசல் போல அதிகரித்துவிட்டன. பெட்டிக்கடைகள் பட்டியலை தராத வருவாய்த்துறை உதவி ஆணையர் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் புகார் செய்துள்ளேன். அந்தப் பட்டியலை பெற்று, நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்றார்.

2007-க்கு பிறகு அனுமதி இல்லை 

சாலையோர பெட்டிக்கடைகளில் பெரும்பாலும், மாநகராட்சி விதிமுறைகளை மீறி இறைச்சிக் கடைகள், போதை வஸ்துகள் உள்ளிட்ட வியாபாரங்கள் சட்டவிரோதமாக நடக்கின்றன. இதை பற்றியும் எந்த துறையும் ஆய்வு செய்வதில்லை. இதனால் இறைச்சிக் கழிவுகள், நகர் முழுவதும் சாலையோரங்களில் வீசப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நெடுஞ்சாலைத் துறையில் உள்ள பெட்டிக் கடைகளுக்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. அது அவர்கள் கொடுத்தது. மற்ற துறைகள் சார்பில் அனுமதி இல்லாமல் பெட்டிக் கடைகள், சாலைகளில் இருப்பது உண்மைதான். ஆனால், அனுமதியில்லாத கடைகளை அகற்றித்தான் வருகிறோம். 2007-ம் ஆண்டுக்குப் பிறகு மாநகராட்சியில் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டி, அதை பொது ஏலத்துக்கு விட்டுத்தான் தற்போது கடைகள் வாடகைக்கு விடப்படுகின்றன’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close