திருநெல்வேலி: தொழிலதிபர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, தமிழகத்தின் கடனில் ரூ.2 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திமுக அரசு பொறுப் பேற்கும்போது தமிழகத்தின் கடன் ரூ.4.5 லட்சம் கோடியாக இருந்தது. மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக அரசு கடன் வாங்குகிறது. அதைக் கொண்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
மற்ற மாநிலங்களைவிட தமிழகம் 9.69 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி ஆயோக் கூறியுள்ளது. 2014 வரையிலான 67 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.55 லட்சம் கோடி கடன் வாங்கியது. மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மத்திய அரசு ரூ.126 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. பிஹார், மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை வாரி வழங்கியும், அந்த மாநிலங்கள் வளர்ச்சி பெறவில்லை.
மத்திய அரசு முறையாக நிதி வழங்காததால், தமிழகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கடன் வாங்கப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வரை மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொழிலதிபர்கள் 10 மடங்கு சொத்து வைத்துள்ளனர். எனவே, தமிழகத்தின் கடனில் ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
தவெக தலைவர் விஜய் வெளிமாநிலங்களுக்கு சென்று வருவதற்காக பயன்படுத்தப்படும் தனி விமானத்தை, மத்திய அரசு சார்பில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. அமித்ஷா கட்டளைப்படி விஜய் பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.