மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற திமுக பொதுக்குழுக் கூட்டத்துக்காக மதுரை உத்தங்குடியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
மதுரையில் ஜூன் 1-ல் நடக்கவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து 7 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள உத்தங்குடி அருகே பிரதான சாலையை ஒட்டியுள்ள 20 ஏக்கர் நிலத்தில் பொதுக் குழுக் கூட்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரே அரங்கில் 7 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கும். உணவருந்த தனியாக ஒரு அரங்கமும் அமைக்கப்படுகின்றன. இவை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ளது. மழை, காற்று, வெயிலால் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும், நட்சத்திர விடுதியைப்போன்று உள்ளரங்க அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உட்பட 7 ஆயிரம் பேர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்களது வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கும் இடவசதி தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து வெளியே செல்லும் கார்கள் பாண்டி கோயில் சுற்றுச்சாலையில் நேரடியாக இணையும் வகையில் புதிதாக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கும். பகல் 12.30 மணியளவில் கூட்டம் முடிவடையும். தேர்தல் பணிகளை தீவிரமாக துவங்குவதற்கு அச்சாரமாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு மிக முக்கியமானதாக இருக்கும். கூட்டம் முடிவடைந்த பின்பு பொதுக்குழு உறுப்பினர்க ளுக்கு தடபுடலான சைவ, அசைவ விருந்து நடைபெறும். இதற்காக தமிழகத்தின் சிறந்த சமையல் கலைஞர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர், அமைச்சர்கள், விஐபிக்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் படுகிறது. வாகன பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: திமுக பொதுக்குழுக் கூட்டம் பெரும்பாலும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்தான் நடைபெறும். தற்போது திமுகவை இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் வகையில் சென்னைக்கு வெளியே மதுரையில் நடத்தப் படுகிறது. இதற்கு முன்னர் 1977-ல் மதுரையில் நடந்தது. சுமார் 48 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையில் நடக்கிறது. மேலும் திமுக கட்சியின் இளைஞர் அணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களாக பங்கேற்கின்றனர்.
இதில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று 7-வது முறையாக திமுக ஆட்சியமைக்கும் வகையில் பல முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும். மேலும் அமைச்சர் பி.மூர்த்தி சாதாரண கூட்டங்களையே மாநாடு போல் நடத்தும் வல்லமை படைத்தவர் என தமிழக முதல்வரால் அடிக்கடி பாராட்டு பெறுபவர். அவரிடம் இக்கூட்ட ஏற்பாடுகளுக்கு முழு பொறுப்பையும் திமுக தலைமை ஒப்படைத்துள்ளது. அதன்படி பொதுக் குழுக் கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.