பெண்கள் Vs மதுப் பிரியர்கள் - அஞ்செட்டி அருகே டாஸ்மாக் கடை விவகாரத்தில் மறியல்


அஞ்செட்டி அருகே மலைக் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்களும், திறக்கக் கோரி மதுப் பிரியர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடை திறக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் மலைக் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இக்கடை சாலை யோரம் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதால், கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்தாண்டு டாஸ்மாக் கடை நாட்றாம்பாளையத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் ஒகேனக்கல் செல்லும் சாலையில் உள்ள என்.புதூருக்கு மாற்றப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் நாட்றாம் பளையத்துக்கு கடை மாற்றப்பட்டது. இந்நிலையில், என்.புதூர் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடையைத் திறக்க நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இத்தகவல் அறிந்து அங்கு பத்திகவுண்டனூர் மற்றும் கூசப்பன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரண்டு, எதிர்ப்பு தெரிவித்து ஒகேனக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, “என்.புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால், ஒகேனக்கல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இங்கு மது அருந்தி விட்டு, தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பெண்கள் அச்சத்துடன் இச்சாலையைக் கடந்து செல்லும் நிலை ஏற்படும். எனவே, டாஸ்மாக் கடையை திறக்க விடமாட்டோம்” என்றனர்.

இதனிடையே, என்.புதூர், அட்டப்பள்ளம், ஆரேக்கியபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) டாஸ்மாக் கடையைத் திறக்க வலியுறுத்தி, அதே சாலையில் மறியலில் ஈடுபட்டனர். எதிரும், புதிருமாக நடந்த மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், டாஸ்மாக் கடையைத் திறக்க முடியாமல் 2 மணி நேரம் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் போலீஸார் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து, கடை திறக்கும் முடிவை கைவிட்டு, நாட்றாம் பாளையத்தில் மீண்டும் திறக்க முடிவு செய்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதேநேரம் நாட்றாம்பாளையத்தில் மீண்டும் கடையை திறக்க டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் போலீஸார் சென்ற போது, அங்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடை திறக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

x