அரூர் பகுதியில் கனமழையின் போது இடி, மின்னல் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். மேலும், 3 கால்நடைகளும் உயிரிழந்தன.
தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடத்தூர், பையர்நாயக்கன்பட்டி, நவலை, வேப்பம்பட்டி, அரூர், மாம்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, எட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தீர்த்தமலை, கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், அரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகளும் காற்றில் பறந்து சேதமடைந்தன. பையர் நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட உட்டப்பட்டி கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த காளியப்பன் (60) என்பவர் கால்நடைகளுக்கு காவலுக்காக மாட்டு கொட்டகையில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தபோது இடி, மின்னல் தாக்கியதில் காளியப்பன் உயிரிழந்தார். அவரது கொட்டகையில் கட்டியிருந்த ஒரு கறவை மாடு, கன்று குட்டியும் உயிரிழந்தன. இதேபோல் எல்லப்புடையாம்பட்டி அருகேயுள்ள புறாக்கள் உட்டை கிராமத்தில் இடி, மின்னல் தாக்கியதில் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று உயிரிழந்தது.
மின் விநியோகம் பாதிப்பு: பலத்த இடி, மின்னல், காற்று காரணமாக மின்வாரிய டிரான்ஸ்பார்மர், பீடர்களில் பழுது ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பகுதிகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பீடர்கள் பாதிக்கப்பட்டன. சுமார் 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. தொடர்ந்து சீரமைப்புப் பணியில் இரவு, பகலாக மின் வாரிய பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் படிப்படியாக மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.
ஒகேனக்கல்லில் 90 மி.மீ. மழை: தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக ஒகேனக்கல் பகுதியில் 90 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நேற்று காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): கடத்தூரில் 59, பையர் நாய்க்கன் பட்டி 46, நவலை 44, வேப்பம்பட்டி 32, மாரண்ட அள்ளி பகுதியில் 31, அரூர் 30, மாம்பட்டி 23, பென்னாகரம் பகுதியில் 20, தருமபுரி பகுதியில் 15 மி.மீ மழை பதிவானது. கனமழையால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மின் வாரியம் எச்சரிக்கை: மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மின் வாரியம் அறிவுறுத்தி யுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அரூர் செயற்பொறியாளர் (பொ) அழகுமணி கூறியதாவது: அரூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றும், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுவதாலும், மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது உரசுவதாலும் மின் தடை, மின் விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மின்சார மின்மாற்றியின் அருகில் அல்லது மின் பாதைகளின் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பங்கள், ஸ்டே கம்பிகள் மற்றும் மின்மாற்றி அருகில் செல்வதையோ, தொடுவதையோ தவிர்க்க வேண்டும். மின் கம்பத்திலோ, ஸ்டே கம்பிகளிலோ ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கட்ட வேண்டாம். எந்த இடத்திலாவது மரக்கிளைகள் முறிந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்து இருப்பதைக் கண்டாலோ உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கோ அல்லது அந்தந்த பகுதி மின் வாரிய அலுவலக பொறியாளர் களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
ஒசூரில் 39 மி.மீ மழை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஓசூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது.
நேற்று காலை 7 மணி நிலவரப் படி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: ஓசூர் 39, ஊத்தங்கரை 34, பாம்பாறு அணை 28, தேன்கனிக்கோட்டை, கெலவரப்பள்ளி அணையில் தலா 25, பெணுகொண்டாபுரம் 22.40, அஞ்செட்டி 20, கிருஷ்ணகிரி அணை 14.2, ராயக்கோட்டை 13, கிருஷ்ணகிரி 10.30, நெடுங்கல் 9.2, சூளகிரி, போச்சம்பள்ளியில் தலா 5, சின்னாறு அணை 4. பாரூர் 2.8 மி.மீ மழை பதிவானது.