ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கியதும் கனமழை - கட்டண உயர்வாலும் களையிழந்த பூங்கா!


படம்:ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி தொடங்கியதும் கன மழை பெய்ததாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நுழைவு கட்டண உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊ்டடியில் உள்ள புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரி கோல்டு, ஜினியா, டெல் முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் மலர் மாடம் உள்பட பல இடங்களில் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. விழாவின் முக்கிய அம்சமாக ராஜ ராஜ சோழனின் அரண்மனை உருவம், கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை உருவம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமான மலர்களால் பட்டத்து யானை, அன்னப்பறவை படகு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் அமல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மலர்க் கண்காட்சியை காண அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக சரிந்தது. மேலும், கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், வழக்கமாக கண்காட்சி தொடக்க விழா அன்று காணப்படும் கூட்டம் நேற்று இல்லை. பூங்காவில் குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில், கண்காட்சி தொடங்கிய சிறிது நேரத்தில் ஊட்டியில் கன மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அரங்குகள், விழா மேடை பகுதிகளில் தஞ்சமடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்ததால், அங்கேயே முடங்கிக் கிடந்தனர். மேலும், புல் தரைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், புல்வெளிகளில் விளையாட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

x