ரவி மோகன் பகிரங்க பகிர்வு: ‘என்னை கணவனாக இல்லை, பொன் முட்டையிடும் வாத்து போலவே அவர் நடத்தினார். காதல் என்கிற பெயரில் என் பணம், சொத்து என எல்லாவற்றையும் தனக்காக பயன்படுத்திக் கொண்டார். என்னுடைய இரு மகன்களுக்காக எல்லாவற்றையும் செய்வேன்” என ஆர்த்தி ரவி குறித்து நடிகர் ரவி மோகன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!: தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்களை இணையவழியில் ஜூன் 6ம் தேதிக்குள் பெற வேண்டும். அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 11ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மதிப்பெண், சாதி வாரியாக மாணவர்கள் ஜூன் 14-ம் தேதி தேர்வு செய்யப் படுவார்கள்.
ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படிப்பில் சேரும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
வடகாடு மோதல் தொடர்பான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு: வடகாடு மோதல் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் நீதிபதிகள், கலவரம் நடந்த அன்று, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை? மே 4 முதல் 7-ம் தேதி வரை கோயில் மற்றும் பிரச்சினை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
“தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்!” - ஓபிஎஸ்: இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் சரியான இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்” என்று அவர் கருத்து தெரிவித்தார்.