மத்திய அரசு ஆணைக்கு ‘அடக்க’ நிகழ்வு: புதுச்சேரியில் ஓய்வுபெற்ற சுகாதார ஊழியர்கள் நூதன போராட்டம்


படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: மத்திய அரசு ஆணையை அடக்கம் செய்து, புதுச்சேரியில் ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு சுகாதார ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி நோயாளி கவனிப்பு படியை 2017 முதல் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் புதுவை அரசு 2023 முதல் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் நிலுவைத் தொகை கிடைக்காமல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஆணைப்படி 6 ஆண்டு நிலுவை நோயாளி கவனிப்பு படியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுவை அரசு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் ஆணையை அடக்கம் செய்யும் நூதன போராட்டம் நடந்தது. இதற்காக ஒய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் மிஷன் வீதி சம்பா கோவில் அருகே திரண்டு ஊர்வலம் புறப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு சங்க தலைவர் வெற்றிவேல், பொதுச் செயலாளர் பக்தவச்சலம், பொருளாளர் மோசஸ் புஷ்ப ராஜ் தலைமை வகித்தனர். ஊர்வலத்தில் மத்திய அரசின் சுகாதார சார்பு செயலாளர் எம்.கே.சிங் போல வேடம் அணிந்து வந்த நபர் இந்தியில் அரசு ஆணை பற்றி விளக்கி 2017 முதல் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என இந்தியில் கூறினார்.

ஊர்வலத்தில் மத்திய அரசின் ஆணை பேனரை தூக்கியடி இறுதிச் சடங்குக்கு செல்வது போல மண் பானையுடன் வந்தனர் அவர்களை போலீஸார் ஆம்பூர் சாலையில் தடுத்தனர். இதனையடுத்து மத்திய அரசின் பேனரை அங்கு வைத்து மாலை அணிவித்து அடக்கம் செய்து போராட்டம் நடத்தினர்.

x