திருச்சி: தமிழகத்தின் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பாரதிதாசன் பல்கலைக் கழகம் விளங்குகிறது. திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பிரதான வளாகம், காஜாமலை வளாகம் என மொத்தம் 36 துறைகள் உள்ளன. ஆசிரிய, ஆசிரியைகள் 153 பேரும், ஆசிரியரல்லாத பணியாளர்கள் 390 பணியாற்றுகின்றனர்.
பாரதிதாசன் பல்கலை. உட்பட தமிழக அரசின் உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்கள் உரிய அலுவலரின் முறையான அனுமதி பெறாமல் அலுவலகத்துக்கு தாமதமாக வருவதும், அலுவலகத்தில் இருந்து விரைவாக செல்வதும், அவ்வப்போது பணியில் அங்கீகரிக்கப்படாத விடுப்பில் இருப்பதும் தொடர் கதையாக இருந்தது.
அதையடுத்து பல்கலைக்கழகங்களில் சுமுகமான செயல்பாட்டுக்காக இன்று முதல் (மே 15) பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரதான வளாகத்தில் 13 இடங்களிலும், காஜாமலை வளாகத்தில் 3 இடங்களிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பணியாளர்களின் 3டி புகைப்படங்கள் இக்கருவிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்த கருவி அருகே முகத்தை சில விநாடிகள் காட்டினால் மட்டுமே போதும். பல்கலைக் கழக விதிகளின் படி, பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை.
நிரந்தர பணி நிலையில் பணிபுரியும் அனைவரும் அலுவலகத்திற்குள் நுழையப் போகும் காலை 10 மணி, மாலை வெளியேறும் போகும் மாலை 5.45 மணிக்கு பயோ மெட்ரிக் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக பேருந்துகள் புறப்படும் நேரமும் மாற்றி அமைக்கப்படுள்ளது. இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்த பயோ மெட்ரிக் கருவி செயல்பாடுகளை பல்கலைக்கழக பதிவாளர் காளிதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் காத்த முத்து ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.