புதுச்சேரி: பிரதமர் மோடியை விமர்சித்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் கோரியுள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுவை துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பதவியேற்றத்தில் இருந்து ஆளும் அரசு அனுப்பும் அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கும் ஒப்புதல் அளித்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஆளுநர், முதல்வர் இடையே பனிப் போர் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல. ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசினால்தான் மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும்.
புதுவையில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை அரசின் இடஒதுக்கீடாக ஆளுநர், முதல்வர் இணைந்து பெற்றுத்தர வேண்டும். பாகிஸ்தான் மீதான பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஆனால், இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வாக்கு வங்கிக்காக குறை கூறி வருகின்றன.
பாதியிலேயே போரை நிறுத்திவிட்டதாகவும், பிரதமர் மோடிதான் காரணம் என முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இது தேசத்துக்கும், ராணுவ நடவடிக்கைக்கும், அரசின் போர்க்கால நடவடிக்கைக்கும் எதிரானது. பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் தோல்வி அடைந்தோருக்கு தனி கவனம் செலுத்தி மறுதேர்வில் வெற்றி பெற செய்ய ஆசிரியர் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று அன்பழகன் கூறியுள்ளார்.