“ஆளுநர், தலைமைச் செயலர் மீது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி டார்கெட்” - நாராயணசாமி குற்றச்சாட்டு


புதுச்சேரி: “புதுச்சேரி முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் பனிப் போர் நிலவுகிறது. ஆளுநரை மாற்ற மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரினார். ஆளுநர், தலைமைச் செயலர், ஆளுநரின் செயலர் ஆகியோரை முதல்வர் ரங்கசாமி டார்கெட் செய்கிறார்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. காஷ்மீர் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக விவாதிக்கக் கோரியதற்கு பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். இந்தத் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் தர வேண்டும்.

பாஜக பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கை, சிபிஐக்கு மாற்ற காங்கிரஸ் கோரியுள்ளது போல் பாஜக எம்எல்ஏ-க்கள், ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மனுவும் வழங்கியுள்ளனர். புதுச்சேரி காவல் துறை மற்றும் அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. சிபிஐ விசாரணை கோருவதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் தர வேண்டும்.

போலி மதுபானம் - அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்: புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானங்கள் பிடிக்கப்பட்டு உளவாய்க்காலில் தயாரிப்பு இடத்தையும் தமிழக போலீஸார் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த இடம் அமைச்சர் ஒருவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடம். தமிழக போலீஸார், கலால் துறையினர் நடவடிக்கை எடுத்த நிலையில் புதுச்சேரி கலால் துறை ஆழ்ந்த உறக்கத்திலுள்ளது.

கையூட்டு பெற்றுக்கொண்டு சிறிய போலி மதுபானத் தொழிற்சாலைகள் இங்கு இயங்கி வருகிறது. புதுச்சேரி கலால் துறை லஞ்சத்தில் மூழ்கியுள்ளது. ஏற்கெனவே சந்தனக்கட்டை பிடிப்பட்ட வழக்கும் தற்போது போலி மதுபானங்கள் தயாரிப்பு வழக்கும் உள்ளதால் பாரபட்சமில்லாத விசாரணை நடக்க அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

புதுச்சேரி ஆட்சியிலுள்ள ஊழல்களை வைத்து மகாபாரதமே எழுதலாம். தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநில அந்தஸ்தை முதல்வர் ரங்கசாமி கையில் எடுப்பார். தற்போது மாநில அந்தஸ்து கோருவது முதல்வரின் கபட நாடகம். புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை மாற்ற கோரியுள்ளார்.

ஆனால், அதற்கு மாற்ற முடியாது என்று தெரிவித்துவிட்டனர். இருவருக்கும் இடையே பனிப் போர் நீடிக்கிறது. தற்போது முதல்வர் ரங்கசாமி ஆளுநர், தலைமைச் செயலர், ஆளுநரின் செயலர் ஆகியோரை டார்கெட் செய்கிறார். வரும் ஆகஸ்ட்டில் புதுச்சேரி ஊழல்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மனு தரவுள்ளோம்” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

x