ஊட்டி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுவதெல்லாம் சுத்த ‘ஹம்பக்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 5 நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். ஊட்டி தாவரவியல் பூங்காவில் பிரசித்தி பெற்ற மலர்க் கண்காட்சியை இன்று முதல்வர் தொடங்கிவைக்கிறார்.
இந்நிலையில், நேற்று காலை தாவரவியல் பூங்கா அருகேஉள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே உறுதியளித்தேன். யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் கூறியிருந்தேன். சட்டப்பேரவையில் பேசும்போது ‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என பேசினேன். தற்போது அந்த வழக்கில் தீர்வு வழங்கப்பட்டது. இதேபோல, கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.
செல்லூர் ராஜு கோமாளி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அவர் எதற்காக சந்தித்தார் என்று ஊருக்கே தெரியும். இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டம், மெட்ரோ திட்டம் ஆகியவை தொடர்பாக அமித்ஷாவிடம் பேசினேன் என்று தற்போது கூறி வருகிறார். இதெல்லாம் சுத்த ஹம்பக். பொய் மற்றும் பித்தலாட்டம் செய்வதுதான்பழனிசாமியின் வேலையாகும்.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். அவர் ஒரு கோமாளி.
எனவே, அவர் கூறியதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட விளையாட்டு அரங்கம் சிறப்பு வாய்ந்தது. இங்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வீரர்கள் வந்து பயிற்சி பெறுகின்றனர். தமிழ்நாடு முழுவதுமே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் யார் என்றே தெரியாது. தற்போது யார் விளையாட்டுத் துறை அமைச்சர் என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.