சென்னை: சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது, மதுபானங்களை கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது போன்றவற்றில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழக லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாச்சலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள், டாஸ்மாக், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் தமிழக லஞ்சஒழிப்புத் துறை ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.