வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக செயல் அளவிலான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்வீர்கள்? - தமிழக அரசுக்கு விஜய் கேள்வி


சென்னை: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு செயல் அளவிலான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும் என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களின் உரிமையில் நேரடியாக தலையிட்டது. இது இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்தவகையில், வக்பு என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்பு சொத்துகள் மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்க கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். இதன் தொடர்ச்சியாக வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்மனுதாரரின் பதிலுக்குப் பதிலுரையைத் தவெக தாக்கல் செய்துள்ளது. அந்த பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்தச் சட்டம், அடிப்படை உரிமைகள் மேல் கைவைக்கிறது என்ற அபாயத்தை முதன்மையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும். வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்துக்கு கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்துக்கான அறைகூவலாக இருக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாக்க, அதற்கு எதிராக உள்ள இந்த வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களுடன் இணைந்து தவெக உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராடி வருகின்றன. அதேபோன்று இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தார்மீகக் கடமை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x