வலைதளங்களில் பாலியல் விளம்பரங்களுக்கு தடை: திருமாவளவன் வலியுறுத்தல்


வலைதளங்களில் பாலியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ் நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது என்ற அளவுக்கு இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இந்த வழக்கின் வெற்றிக்கு திமுக, அதிமுக, விசிக என உரிமை கோருவதில் நியாயம் இல்லை. சான்றுகள் வலுவாக இருந்தன. அதனால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. பாலியல் வல்லுறவு குற்றங்களை தடுப்பது குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று கூறும் நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் பாலியல் தொடர்பான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு இதுவும் முக்கியமான காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

x