முதல்வர் ஸ்டாலினை சாடிய இபிஎஸ்: பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், சிபிஐக்கு மாற்றியதும் அதிமுக அரசு. விசாரித்தது சிபிஐ, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் மு.க.ஸ்டாலின், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார்.
வக்பு விவகாரம் குறித்து விஜய் விவரிப்பு: வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்கள் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தார்மிகக் கடமை. வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்துக்கு கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்துக்கான அறைகூவலாக இருக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
‘கூட்டணியில் தவிர்க்க முடியாதவர் ஓபிஎஸ்’ - ஆர்.வைத்திலிங்கம்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர். கூட்டணி தொடர்பாக அவர் நாளை அறிவிப்பார் என்று, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
கிரிஞ்ச் செய்து கொண்டிருக்கிறார் இபிஎஸ் - அமைச்சர் ரகுபதி சாடல்: நூறுநாள் வேலைத் திட்டம், மெட்ரோ திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டி மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாகவும், நேரிலும், நாடாளுமன்றத்தின் வாயிலாகவும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது தமிழக அரசு. மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது திமுக. ஆனால், தனது சந்திப்பால்தான் நிதி கிடைத்தது என கூசாமல் ‘கிரிஞ்ச்’ (Cringe) செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
நிர்வாகிகளுக்கு கனிமொழி அறிவுறுத்தல்: பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அதிமுக அரசு நிற்கவில்லை. இந்த விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் முறையாக வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை திமுக துணை பொதுசெயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி அறிவுறுத்தினார்.