கரூர்: கரூரைச் சேர்ந்த 8 வயது அரசுப் பள்ளி மாணவன் தனது 10 மாத உண்டியல் சேமிப்பு பணத்தை இந்திய ராணுவத்துக்கு அளித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது.
கரூரைச் சேர்ந்த சதீஸ்குமார் - பவித்ரா தம்பதியின் மகன் தன்விஷ். வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர், உறவினர்கள் கொடுக்கும் பணத்தை, இவர் உண்டியலில் சேமித்து வந்துள்ளார். இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஏற்பட்ட நிலையில், ராணுவ வீரர்கள் எல்லையில் போராடி வந்தனர். இவர்களுக்கு உதவ கடந்த 10 மாதங்களாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை, ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்தார்.
இதையடுத்து, பெற்றோருடன் வந்த தன்விஷ், தனது சேமிப்பு உண்டியலை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்யது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, நாட்டுக்காக போரிட்ட ராணுவ வீரர்களின் நலனுக்கு பயன்படுத்தும் வகையில் நான் சேமித்த பணத்தை அளித்தேன். நம்மை பாதுகாப்பவர்களுக்கு உதவ விரும்பினேன்” என்று தனக்கே உரித்தான மழலை மொழியில் பேசியது அனைவரையும் கவரச் செய்தது. நாடு முழுவதிலுமிருந்து மக்கள், அவரது செயலைப் பாராட்டியுள்ளனர்.